"இன்னும் கொஞ்ச நேரத்துல கோட்டுக்கு போகனும். ரெடியாவுங்க" சிறைச்சாலை அதிகாரியின் கட்டளையைக் கேட்டவுடனயே எழுந்து சென்று முகத்தைக் கழுவி உடைகளைச் சீர் செய்து கொண்டு கைதிகளின் வரிசையில் சென்று இணைந்து கொள்கின்றார் பாரூக் நானா.
வரிசையில் இருந்தவர்களது கைகள் சங்கிலியால் பிணைக்கப்படட நிலையில் வரிசை பிரதான வாயிலை நோக்கி நகர்த்தப்பட்டது. கைதிகளின் பெயர்கள் எண்ணிக்கை என்னபன உறுதி செய்யப்பட்ட பின் ஒவ்வொருவராக சிறைச்சாலைப் பேருந்தில் ஏற்றப்பட்டனர்.
பேருந்து நீதிமன்றத்தை நோக்கிப் புறப்பட ஆரம்பிக்கும் போதே பாரூக் நானாவின் கடந்த கால நினைவுகள் சிறகடிக்க ஆரம்பித்தன.
அன்பு மனைவி, மூன்று குழந்தைகள், தாய் தந்தயரை இழந்து திருமண வயதை அடைந்த தங்கை, இது தான் பாரூக் நானாவின் குடும்பம். அரச நிருவனம் ஒன்றில் கணக்காளராக பணிபுரியும் பாரூக் நானாவிற்கு அதிலிருந்து கிடைக்கும் வருமானம் குடும்பத்தைக் கொண்டு நடாத்த போதுமானதாகவே அமைந்திருந்தது.
அன்று வருடத்தின் இறுதி நாள். நிறுவனத்தின் கணக்குகள் அனைத்தும் சீர்செய்யப்பட்டு செம்மையாக்கப்படவேண்டும். அன்றைய தினத்தின் நிறுவனப் பணிகள் நள்ளிரவு வரை நீடிக்கலாம் என்ற என்ற எதிர்பார்ப்பில் பிள்ளைகளின் புது வருடத்திற்கான பாடசாலைக்குரிய பொருட்களை பகல் வேளையிலேயே வாங்கி வைத்துவிட்டு பணிகளைத் தொடர்ந்தார்.
கணக்கு வேலைகள் அனைத்தும் இரவு பத்து மணியாகும் போது நிறைவுக்கு வந்து விட்டது. ஒரு பாரிய பொறுப்பை நிறைவேற்றிய திருப்பதியில் குழந்தைகளுக்காக வாங்கிய பொருட்களையும் சுமந்து கொண்டு காரியாலத்தை விட்டு வெளியேறி பிரதான வீதி ஓரத்திற்கு வருகின்றார்.
மிக வேகமாக கடந்து சென்ற வான் வண்டி ஒன்று திடீரென நிறுத்தப்பட்டு பின்னோக்கி வந்தது..
"பாரூக் நானா! எங்க வீட்டுக்கா? வாங்க ஏறிக் கொள்ளுங்க"
சற்று குனிந்து வாகனத்துக்குள் உற்றுப்பார்த்த பாரூக் நானா " ஆ! ரீஸா ஹாஜியாரா நாள் யாருண்டு பாத்த.. நீங்க எங்க இந்தப் பக்கம்"
" பிஸ்னஸ் பெய்த்துட்டு வாரென். இண்டக்கி கொஞ்சம் லேட் நீங்களும் இப்பதான் வேல உட்டு போரீங்க போல"
"ஹ்ம் வருஷக் கடசி என்டதால கணக்கு முடிக்க இருந்திச்சி நீங்க வந்தது வசதியாப் போச்சி ஜஸாக்கல்லஹ்"
இருவரும் ஊர் விடயங்களைக் கதைத்தவாறு பயணத்தைத் தொடர்ந்தனர். சிறிது தூரம் செல்லும் போது பாதை ஓரமாக இரண்டு வாலிபர்கள் வண்டியை நிறுத்துமாறு சைகை காட்டினர். வாகனத்தை நிறுத்தாது சிறிது தூரம் சென்ற ரீஸா ஹாஜியார் சட்டென நிறுத்தி " பாரூக் நானா பொடியனுங்கள பாத்தா பாவமா ஈக்கி அவங்களுக்கு நாளக்கி புது வருஷம் எனா! அவங்களயும் ஏத்திட்டு போவோம். எங்கட பண்பாட்ட காட்றதுக்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம் எனா" என்று கூறிக்கொண்டே வாகனத்தைப் பின் நோக்கிச் செலுத்தி அவ்விருவரையும் ஏற்றிக் கொண்டார்.
ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து வண்ணம் பயணம் தொடர்ந்தது. சிறிது தூரம் செல்லும் போது பொலிஸ் வாகனம் ஒன்று பாதையின் குறுக்கான நிறுத்தப்பட்டருப்பதைக் கண்ட ரீஸா ஹாஜியார் தனது வாகனத்தின் வேகத்தைக் குறைத்துக் கெண்டார்.
வாகனம் நிறுத்தப்பட்ட தாமதத்தில் இரண்டு வாலிபர்களும் இறங்கி ஆளுக்கொரு திசையில் ஓடத்துவங்கினர். வேகமாக வந்த பொலிஸ் அதிகாரிகள் வாகனத்தைச் சுற்றி வளைத்து சேதனையிடத்துவங்கினர். முடிவில் வாகனத்தில் பின்பக்கமாக இருந்த பொதி ஒன்று பொலிசாரின் கைகளில் சிக்கியது.
செய்வதிரியாது இருவரும் திகைத்து நின்றனர். ஓடிய இருவரின் விபரம் கேட்டு பொலிசார் துன்புறுத்தங் துவங்கினர். ஈற்றில் வாகனத்துடன் இணைத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.
கடந்த ஒரு வருடமாக வழக்கு இழுபட்டுச் செல்கிறது. பத்திரிகை தொலைக்காட்சி என இருவரது பெயர்களும் நாறடிக்கப் படுகின்றன. தங்கையின் திருணம், குழந்தைகளின் படிப்பு இவை கூடக் கேள்விக் குறியாகின.
கைதிகளை ஏற்றி வந்த பஸ் நீதிமன்ற வாயிலை அடைகிறது. தனது மனைவி, தங்கை கூடவே வழக்றிஞர் மூவரின் முகங்களிலும் கவலையின் சாயல படிந்திருந்தது. இத்னை நாளும் இழுத்தடிக்கப்பட்ட வழக்கு இன்றுடன் முடிவடையப் போகின்றது.
தீர்ப்பு வழங்குவதற்காக இருவரும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுகின்றனர். வழக்கின் தீர்ப்பு இவ்வாறு வபசிக்கப்படுகிறது. " குற்றம் சாட்டப்பட்டவர்கள் தம்மை நிரபராதிகள் என நிரூபிக்கப் போதிய சாடசிகளை முன்வைக்கத் தவறியமையால் போதைப் பொருள் கடத்து முயன்ற குற்றத்திற்காக இவ்விருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்படுவதாக இந்நீதிமன்றம் தீர்ப்பளிக்கின்றது."
- வெலம்பொட ராஃபி-
அல்ஹஸனாத் பெப்ரவரி 2014
- வெலம்பொட ராஃபி-
அல்ஹஸனாத் பெப்ரவரி 2014
