Spenser

 கொல்லாமல் கொல்லும் உள்ளம்



-சமூகத்தில் நிலவும் உளநோய்கள் தொடர்பில் விழிப்புணர்வூட்டும் தொடர்.-

Dr. M.K. ஹரீஸ் முஹம்மத் & ராஃபி சரிப்தீன்

பகுதி 01
“வலிக்குது மகள் கழுத்த விடுங்க. உம்மா பாவமில்லயா.. மகளுக்கு உம்மாவோட இரக்கமில்லயா.. ஏன் செல்லம் இப்படி நடந்து கொள்றீங்க . கழுத்த நெரிக்காம விடுங்கமா உம்மாவுக்கு மூச்சு அடைக்குதுமா.. உம்மா செத்துட்டா உங்களயும் வாப்பாவயும் யாரும்மா பாத்துக்குவாங்க.” என அந்தத் தாய் கத்திக் கதறி கெஞ்சிக் கூத்தாடிக் கொண்டிருக்கின்றாள். என்னதான் உம்மா கத்திக் கதிறினாலும் மகளின் ஆவேசம் குறைந்து விடவில்லை. மாறாக அது இன்னுமின்னும் அதிகரித்துச் சென்றுகொண்டிருந்தது.

அந்த வீட்டைப் பொறுத்த வரையில் இந்த சம்பவம் புதிய விடயமல்ல, ஒரு மாதத்தில் எப்படியும் மூன்று முறைகளாவது இது போன்று நடைபெறுவது வழமையாகிவிட்டது. மகளுக்கு இவ்வாறான நிலை ஏற்படும் போது ஒரே ஒரு சிகிச்சை முறைதான் பலனளிப்பதாக இருக்கும். அதுவும் தற்காலிக தீர்வை மாத்திரமே பெற்றுத் தருவதாக இருக்கும். அந்த சிகிச்சையை வழங்க பிள்ளையின் தந்தை அந்த இடத்திற்கு வந்தாக வேண்டும். எனவே தாய் வேறு வழியின்றி தனது கணவருக்கு தொலைபேசி அழைப்பெடுக்கின்றாள். “என்னங்க.. மகள் பிரச்சின பன்றா கொஞ்சம் அவசரமா வாங்களே.” என பதட்டத்துடன் கணவரிடம் முறையிடுகின்றாள் .

மாதத்தில் எப்படியும் மூன்று முறையேனும் இந்த அழைப்பு வரும் என்பதனை அவர் எதிர்பார்த்தே இருப்பதனால் தத்தைக்கு இவ்வாறான அழைப்புக்கள் அதிர்ச்சியளிப்பதாக இருப்தில்லை. அழைப்புக் கிடைத்த மாத்திரத்தில் மோட்டார் சைக்கிளை இயக்கிக் கொண்டு வீட்டை நோக்கிச் வேகமாகச் செலுத்தினார் அந்தக் குழந்தையின் தகப்பனார். மோட்டார் சைக்கிளின் சத்தம் காதுகளுக்கு எட்ட அந்தப் பிள்ளையின் நடவடிக்கைகளில் தொய்வு ஏற்படத்துவங்கியது. மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு வீட்டுக் கதவினைத் திறந்து கொண்டு “மகள் என்ன செய்றீங்க” என்று சொல்லிக் கொண்டே வீட்டினுள் வர அந்தப் பெண் பிள்ளை அனைத்தையும் மறந்து வாப்பா என அன்போடு கட்டித் தழுவிக் கொள்கின்றாது. அன்பு மகளின் பெயர் சில்மியா. சில்மியாவின் அம்மா பரீதா பல்கலைக்கழக பட்டம் பெற்று பட்டப் பின்படிப்பையும் நிறைவு செய்துவிட்டு ஆசிரியராகத் தொழில் புரிகின்றார். அப்பாவுக்கு நவ்பர் என்று பெயர். உயர் தரம் வரை கல்வி பயின்று விட்டு கிராம சேவையாளராக பணியாற்றி வருகின்றார். பரீதாவுக்கும் நவ்பருக்கும் திருமணமாகி 3 வருடங்களின் பின்னரே சில்மியா எனும் பெண் குழந்தை கிடைக்கின்றது. பரீதாவும் நவ்பரும் தத்தமது தொழில்களில் முழு நேரமாக ஈடுபட்ட போதிலும் தமது மகளைப் பக்குவமாக வளர்த்தெடுப்பதில் எந்தக் குறையும் வைக்கவில்லை. தங்களால் முடிந்த அளவில் கவனமெடுத்து குழந்தையின் விடயங்களை பார்க்கத் தவறவுமில்லை.

குழந்தை வளர்ந்து எட்டு அல்லது ஒன்பது வயதாகும் போது ஒரு நாள் முதன் முறையாக மகளது நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. சில்மியா ஏதோ வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பாள். அல்லது படித்துக் கொண்டிருப்பாள். திடீரென உரத்த சத்தத்தில் சிரிக்கத் துவங்குவாள்.. அடுத்து திடீரென அந்த சிரிப்பு அழுகையாக மாறிவிம்.. கண்கள் சிவந்து அகல விரிந்து கொள்ளும்.. தலை முன்னும் பின்னும் ஆடத் துவங்கும். அவளது பேச்சு அடித்தொண்டையிலிருந்து பேசுவது போன்றே இருக்கும். சுருங்கச் சொன்னால் பேயாடுவது போன்று அவள் காட்சியளிப்பாள். நேரம் செல்லச் செல்ல தலைமுடியைப் பிய்த்துக் கொள்ளத் துவங்குவாள். சில வேலைகளில் கையில் கிடைக்கும் ஏதாவது ஒன்றைக் கொண்டு தனது உடலைக் காயப்படுத்திக்கொள்வாள். இந்த சந்தர்ப்பத்தில் அவளைக் கட்டுப்படுத்துவது என்பது முடியாத காரியமாக அமைந்துவிடும். அந்த நேரத்தில் யார் அருகில் சென்றாலும் அடி விழுவது நிச்சயமாக அமையும். மகள் தனது உடம்பைக் காயப்படுத்துவதைத் தடுப்பதற்காக மகளின் அருகில் சென்று அடிவாங்கிக் கொள்வாள் அந்த அன்புத் தாய்.

ஒரு பெண் பிள்ளைக்கு இந்த நிலை ஏற்படுவதானது அவளது எதிர்காலத்தை வெகுவாகவே பாதித்துவிடும் என்ற பயம் பிள்ளையின் பெற்றோருக்கும் அவர்களது நலன் விரும்பிகளுக்கும் நிறையவே இருந்தது. இது ஒரு செய்தானின் அல்லது கெட்ட ஜின் ஒன்றின் பார்வையாக இருக்கலாம்; என்றே உறவினர்கள் பலரும் குறிப்பிட்டனர். ஆளாளுக்கு ஒரு ஹசரதின் பெயர் சொல்லி அவரிடம் சென்றால் ஜின்னை ஓட்டிவிடுவார் என்பதாகப் பலரும் ஆலோசனை வழங்கினர். அவர்களில் அதிகம் பேர் சொன்ன ஒரு ஹசரத்திடம் தமது மகளை அழைத்துச் செல்ல தம்பதியினர் முடிவெடுத்தனர்


அந்த ஹசரத்தின் தொலைபேசி இலக்கத்தைத் தேடிப் பெற்று விபரம் பெற்றுக் கொள்வதற்காக அழைப்பெடுத்தனர். திங்கள் மற்றும் வியாழன் தினங்களில் மாத்திரமே நோய்க்குப் பார்த்தல் நடைபெறுவதாகவும், முதலில் வந்து என்ன என்று பார்த்து விட்டு அங்கு சொல்லப்படும் விடயங்களுக்கு ஏற்ப சிகிச்சை வழங்குவது குறித்து முடிவு செய்து கொள்ளுமாறு அந்த நிறுவனத்திலிருந்து விடை கிடைத்தது. பிள்ளையின் எதிர்கால நலன்களைக் கருத்தில் கொண்டு குறித்த தினத்தில் சென்று பார்ப்பதாக அந்தத் தம்பதியினர் தங்களுக்குள் முடிவெடுத்தனர். குறித்த தினம் அதிகாலையிலேயே பயணத்தை ஆரம்பித்து ஹஸரத்தின் இடத்தை அடைந்தனர். அங்கு நினைத்ததை விட கூட்டம் அதிகமாகவே இருந்தது. ஒரு தனியார் செனலிங் சென்றருக்குப் போனது போன்ற உணர்வே அவர்களுக்கு அந்த இடத்தில் ஏற்பட்டது.
புதிய இடம், எப்போதுமே கண்டிராத வைத்திய முறை என்பதால் என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்துப் போய் நின்று கொண்டிருந்தனர். இதனைக் கவனித்த நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் அவர்களது அருகில் வந்து முன்னால் இருக்கும் கவுன்ட்டருக்கு செல்லுமாறு வழிகாட்டினார்.


அவர்கள் கவுன்ட்டருக்குச் சென்று, ஹசரத்திடம் தொலைபேசியின் ஊடாக கதைத்ததாகவும் வந்து பார்க்குமாறு குறிப்பிட்டதாகும் தெரிவித்தனர். அதனைச்செவியுற்ற வரவேற்பாளர் அவர்களது பெயர் முகவரி தொலைபேசி இலக்கம் என்பவற்றைக் கேட்டுக் குறித்துக் கொண்டு டோக்கன் ஒன்றை வழங்கினார். அந்த டோக்கனில் 36 என இலக்கமிடப்பட்டிருந்தது. “எப்புடியும் இன்னம் ரெண்டு மணித்தயாலமாவது இங்க நிக்க வேண்டி வரும் எங்கயாச்சும் போகணும் என்டா போய்ட்டு வாங்க. உங்க நம்பர் கிட்ட ஆவக்கொள்ள எஸ்.எம்.எஸ் அலர்ட் வரும் அப்ப நீங்க வந்தாப் போதும்” என்பதாக அந்த கவுன்ட்டரில் இருந்த வரவேற்பாளர் குறிப்பிட்டார். மகளின் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண்பதை விட வேறு வேலைகள் அந்தத் தம்பதிக்கு இருக்கவில்லை, எனவே தங்களுக்கான நேரம் வரும் வரை அந்த இடத்திலேயே அமர்ந்திருந்தனர்.


குறித்த மருத்துவ நிலையத்தில் சிகிச்சை பெறுவதற்காக வந்திருந்தவர்களில் பலர் விசேட தேவையுடைய பிள்ளைகளை அழைத்து வந்தவர்களாகவே காணப்பட்டனர். விசேட தேவையுடைய குழந்தைகள் என்பது மூளையின் சரியான வளச்சியைப் பெறாதவர்கள் என்பதாகக் குறிப்பிடலாம். அவர்களது முகத்தோற்றமே அவர்களது நோயை அடையாளம் காட்டுவதாக இருக்கும். இந்த நோய் குறித்து நவ்பர் ஏற்கனவே அறிந்திருந்தார். மூளை வளர்ச்சி இனமையினை ஓதிப்பார்த்தல் மூலம் குணப்படுத்த முடியுமா என்பது குறித்த சந்தேகம் நவ்பரின் மனதில் அவ்வப்போது தோன்றிய போதிலும் “குணம் கிடைக்காட்டி இவ்வளவு சனம் வருமா” என்று தனது மனதுக்குச் சொல்லி அவ்வப்போது மனதைத் தேற்றிக்கொண்டார்.
நீண்ட நேரக் காத்திருப்புக்குப் பின்னர் நவ்பரின் இலக்கம் அழைக்கப்பட்டது. கணவன் மனைவி இருவரும் அன்பு மகளை அழைத்துக் கொண்டு பெரிய ஹசரத் இருக்கும் அறையை நோக்கிச் செல்லலாயினர் அறைக்கு வெளிப்பக்கமாக வாயிலின் வலது பக்கத்தில் இடப்பட்டிருந்த மேசை ஒன்றின் அருகில் அமர்ந்திருந்த ஒருவர் இவர்களை அருகில் அழைத்து அமரச் சொன்னார். “ “ஹசரத் உள்ள ஒருத்தருக்கு மருத்துவம் பாத்துட்டு இருக்காரு அவங்க வெளிய வந்த உடனே நீங்க உள்ள போகலாம். நீங்க பாக்க வந்ந விசயத்த நெனச்சிக் கொண்டு உள்ள போங்க. ஹசரத் உங்களுக்கு இருக்குற பிரச்சினய பத்தியும் அதுக்கான பரிகாரம் பத்தியும் சொல்லுவாரு. ஹசரத் இதுகளுக்கு காசு எடுக்குற இல்ல நீங்க விருப்பமுண்டு எவ்வளவாச்சும் குடுக்கலாம். 1000 ரூவா குடுக்குற ஆக்களும் இருக்காங்கள 5000 ரூபா குடுக்குற ஆக்களும் இருக்காங்க உங்களால் முடியுமானத இந்த என்வலப்ல போட்டு வெத்துலயோட குடுங்க” என்று கடித உரை ஒன்றை கையில் திணித்து உள்ளே போகச் சொன்னார். நவ்பரும் கதவின் அருகில் செல்லும் போதே சட்டைப் பையில் கையைவிட்டு ஆயிரம் ரூபா தாள் ஒன்றை என்விலப்பில் திணித்துக்கொண்டே கதவடியில் காத்திருந்தார். உள்ளே சிகிச்சை பெற்றுக் கெண்டிருந்தவர் கதவைத் திறந்து வெளியே வர இவர்கள் மூவரும் அறையுனுல் சென்றனர்.


பெரிய ஹசரத் இருக்கும் அறையின் தோற்றம் சற்று வித்தியாசமாக அமைந்திருந்தது. அது மனதில் ஒரு வகையான பீதியை உருவாக்குவதாக இருந்தது. அறையின் உட்சுவர்களில் ஆங்காங்கே குர்ஆன் வசனங்கள் தொடங்கவிடப்பட்டிருந்தன. சில இடங்களில் அரபி வசனங்கள் எழுதப்பட்ட தகடுகள் தொங்க விடப்பட்டிருந்தன. சாம்பிராணி வசைனை அந்த அறை முழுவதுமே வீசிக்கொண்டிருந்தது. கிதாபுகள் ஆங்காங்கே போடப்பட்டிருந்தன. கதிரையொன்றின் மீது பச்சை நிறத்திலான விரிப்பொன்றை விரித்து அதன் மீது பெரிய ஹசரத் கம்பீரமாக அமர்ந்திருந்தார். அடர்ந்த தாடி கண்களில் சுருமா, தலையில் சுற்றியிருந்த எட்டு முலம் தலைப்பாகை என்பன ஹசரத்தின் கம்பீரத்தை இன்னும் கொஞ்சம் அதிகரித்து. உள்ளே நுழைந்த நவ்பர் குடும்பத்தவர்கள் ஹசரத்துக்கு முன்னால் போடப்பட்டிருந்த கதிரைகளில் அமர்ந்துகொண்டனர்.


“யாருக்கு பாக்கணும் என்டு மட்டும் சொல்லுங்க” அந்த அறையில் அதுவரை நிலவிய அமைதியைக் கிழித்துக் கொண்டு ஹசரத்தின் கம்பீரமான குரல் ஒலித்தது.


“மகளுக்குத்தான் பாக்கணும் ஹசரத்.”


குரலைத் தாழ்த்தி மரியாதையாகப் பதிலளித்தார் நவ்பர்.


“ம்… ஒழுங்கா படிக்கிறதில்ல வீட்டுல ஒரே கொழப்பம் பண்றது. அன்பா பேசினா சத்தமா பதில் சொல்றது இதெல்லாம் இருக்கா”


“ஓமோம் ஹசரத் அதோட இவ ஒரு நோரத்துல பயங்கரமா மாறிடுவா ஃவைப்ட கழுத்த நெரிப்பா நான் வீட்டுக்கு போனாத்தான சரியாவுது. இத சரிப்படுத்த என்னமாவது செய்ய ஏலுமா…


நவ்பரின் மகளை உச்சி முதல் பாதம் வரை ஒரு பார்வை பார்த்துவிட்டு, மகளின் தலையில் தனது கையை வைத்துக்கொண்டு அஊதுபில்லாஹிமினஷ் ஷைதானிர் ரஜீம் என ஆரம்பித்து சிறிது நேரம் ஓதத் துவங்கினார். குர்ஆனிய வசனங்கள் சிலவற்றை ஓதிவிட்டு.



“மகன் பிரச்சின கொஞ்சம் பெருசுண்டு தான் சொல்லுப்படுது. உங்கட மகள் கிட்ட மூனு ஜின் கூடியிருக்குறதாத்தான் காட்டுது. அந்த மூனு ஜின்னும் மகள பாடாப்படுத்துது. ஆனா ஒரு நல்ல விசயம் என்னான்டா உங்களுக்கிட்ட ஒரு நல்ல ஜின் தங்கியிருக்கு. அந்த ஜின் உங்கட மகளப் பாதுகாக்குறதுக்காகவே உங்க கிட்ட வந்திருக்கு. அதனால தான நீங்க வார நேரம் பாத்து மகளுக்கிட்ட இருக்குற ஜின்களெல்லாம் பயந்து ஓடிப் போயிடுது” என்று சொல்லிக் கொண்டே கை விரல்களை ஒவ்வொன்றாக மடித்துக் கணக்குப் போடத்துவங்கினார்.
தொடரும்....



விடிவெள்ளி - 2020.09.18