எமது
வாழ்வில் ரஹ்மத் எனும் அருள் மழையை அள்ளித் தெளிக்கவென ரமழான் எனும்
வசந்தம் எம்மை நோக்கி வந்திருக்கிறது. உலக முஸ்லிம்கள் அனைவரும்
இவ்வசந்தத்தை உற்சாகமாக வரவேற்கும் ஆயத்தங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
எமது
நாட்டில் நாலாபுறமும் அமைந்துள்ள பள்ளிவாசல்கள் நிறப் பூச்சு பூசப்பட்டு
அலங்கரிக்கப்படுகின்றன. செயலிழந்து போன மின் குமிழ்கள் அகற்றப்பட்டு புதிய
மின் குமிழ்கள் மாற்றீடு செய்யப்படுகின்றன. நீர்த்தடாகங்கள், மலசலகூடங்கள் உட்பட பள்ளிவாசல் வளாகம் முழுவதும் கழுவி சுத்தம் செய்யப்படுகிறது.
மொத்தத்தில் ரமழானை எதிர்கொள்வதற்காக பள்ளிவாசல்களும் ஊரும் வீடுகளும் புதுப் பொலிவு பெறுகின்றன.
அடியானை வல்ல இறைவனுடன் பிணைக்கும் ஊடகமான ரமழான் எமது உடலையும் உள்ளத்தையும் சலவை செய்து புதுத் தெம்பு தருகிறது.
நோன்பின் உடலியல் பயன்கள் குறித்த முதலாவது மாநாடு 1994ஆம் ஆண்டு மொரோக்கோ நாட்டின் கஸப்லன்கா நகரில் இடம் பெற்றது. உலகம் முழுவதிலுமிருந்து வருகை தந்த முஸ்லிம், முஸ்லிமல்லாத ஆய்வாளர்களின் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆய்வறிக்கைககள் இம்மாநாட்டில் சமர்ப்பிக் கப்பட்டன.
நோன்பு
மனித உடலின் பிணிகள் பலவற்றையும் போக்கி நிவாரணமளிப்பதுடன் மனிதனுக்கு
எண்ணற்ற உடலியல் நலன்களை வழங்குவதாக இம்மாநாட்டின் முடிவுகள்
எடுத்தியம்பின.
உண்ணாமல் இருப்பதால் உடல் நலன் பாதிப்புக்குள்ளாகும் என்ற அச்சம் பலருக்கும் இருப்பதுண்டு. ஆனால், நோயற்ற ஒரு மனிதனால் 50 முதல் 75 நாட்கள் வரை உண்ணாமல் உயிர் வாழ முடியும் என்பது அங்கு நிரூபண மாகியது.
நோன்பு காலங்களில் முஸ்லிம்கள் 12 முதல் 14 மணிநேரங்கள் வரை உண்ணாமல், பருகாமல் இருந்து வருகின்றனர். நோன்பு தவிர்ந்த காலங்களில் தாராளமாக உணவுண்டு பழக்கப்பட்ட உடல், நோன்பின் முதல் இரண்டு தினங்களில் சற்று சமநிலை தளர்ந்து காணப்படுவது இயற்கை.
பொதுவாக
எமது உடலின் இயக்கத்திற்குத் தேவையான குளுக்கோஸ் நாம் உண்ணும்
உணவிலிருந்து நேரடியாகப் பெறப்படுகிறது. அத்துடன் மேலதிகமாகக் கிடைக்கும்
தாதுப் பொருட்கள் கொழுப்பு, புரதம் மற்றும் வேறு அமைப்புக்களில் உடலின் கலன்களில் ஆங்காங்கே சேமித்து வைக்கப்படும்.
நோன்பிருக்கும்போது
இரத்தத்தின் குளுக்கோஸ் மட்டம் வெகுவாகக் குறைந்து வருகின்றது. உடல்
இயக்கத்துக்குத் தேவைப்படும் குளுக்கோஸ் உடல் கலன்களில் சேமிப்பிலுள்ள
பதார்த்தங்களிலிருந்து உடைக்கப்பட்டு மாற்றீடு செய்யப்படுகின்றது. இதன்
விளைவாக உடலின் மேலதிக எடை குறைவதுடன் நீரிழிவு நோய்கள் கூட கட்டுக்குள்
வருவதற்கான வாய்ப்புள்ளது.
உடலின் நச்சு நீக்கல் செயன் முறையின் ஆரம்ப கட்டமான முதல் இரண்டு நாட்களும் உடல் சோர்வடைய வாய்ப்புண்டு. தலைவலி, தலை சுற்றல், குமட்டல், நாவில் வெண்ணிறப் படலம் போன்ற மாற்றங்களை உடல் எதிர்கொள்ளும்.
நோன்பு
துறக்கும் வேளையில் பேரீத்தம் பழங்களை உட்கொள்ளும் சுன்னாவின் ஊடாக இந்த
உடலியல் மாற்றத்தை ஈடுசெய்யலாம். குளுகோஸ் மற்றும் புரூடொஸ் செறிந்த
பேரீத்தம் பழங்கள் உடலுக்கு அதிக கலோரிகளை வழங்கி மூளைக்கு
புத்துணர்வூட்டுகின்றன,
நச்சு
நீக்கல் செயன்முறையின் இரண்டாவது கட்டம் ரமழானின் மூன்றாவது தினத்துடன்
ஆரம்பமாகிறது. உடல் கலன்களின் சேமிப்பிலுள்ள கொழுப்புப் பதார்த்தத்தின்
அதிகமான பகுதிகள் உடைக்கப்பட்டு உடல் இயக்கத்திற்குப் பயன் படுத்தப்படும்
படிமுறை துரிதமாக்கப்படும். வெண்குருதிச் சிறுதுணிக்கைகள்
பலப்படுத்தப்பட்டு நோய் எதிர்ப்புச் சக்தி மெல்ல மெல்ல அதிகரிக்கும்.
சுவாசத் தொகுதியின் கலங்களின் சுத்திகரிப்பு நடவடிக்கை காரணமாக நெஞ்சுப்
பகுதி வலியை உணர்த்தும். நாவு மஞ்சள் நிறமாகக் காட்சிதரும். குடலின்
உட்சுவரின் படிந்திருக்கும் நச்சுப் பொருட்களும் சுத்திகரிப்புப் பணியும்
கூடவே இடம் பெறும்.
8ம் நாள் முதலான காலப்பகுதியில் உடலில் தேங்கியிருக்கும் அசுத்தங்களின் வெளியேற்றம் துரிதமாகும். உடலில் அழிந்துபோன கலங்கள், சேதமடைந்த
திசுக்கள் என்பன உடலிலிருந்து வியர்வை வடிவிலும் வேறு முறைகளிலும்
வெளியேற்றப்படும். இவ்வாறு உடல் தன்னுள் உள்ள கோளாறுகளை சீர்செய்யத்
துவங்கும். உடற் கலங்களின் செயல்கள் புத்துணர்வு பெற்று அவற்றின்
செயற்திறன் அதிகரிக்கும். நோயுற்ற உடல் குணமாகும் செயன்முறை ஆரம்பமாகும்.
நச்சுப்
பொருட்களின் வெளியேற்றம் காரணமாக இக்காலப்பகுதியில் வாய்ப்புண் ஏற்படலாம்.
அத்தகைய சந்தர்ப்பங்களில் உப்பு நீர் சேர்த்து வாய் கொப்பளிப்பதனூடாக இந்த
நிலைமையை சீர்செய்து கொள்ளலாம்.
ரமழானின்
பதினைந்து நாட்கள் கடந்து செல்லும் போது உடலின் நச்சுப் பொருட்களில்
பாரியதொரு பகுதி நீக்கப்பட்டிருக்கும். வெண்ணிறமாக அல்லது மஞ்சள்
படிந்திருந்த நாவு இளம் சிவப்பு நிறம் பெற்று ஆரோக்கியமாகக் காட்சிதரும்.
சேதமடைந்துபோன
திசுக்கள் புதிய திசுக்கள் கொண்டு மாற்றீடு செய்யப்படும். உடற் கலங்கள்
உற்சாகம் பெறும். சுவாசச் செயன்முறை சீர்பெற்று சுவாசம் இலகுவாகும்.
இரத்தம், நிணநீர்
என்பன தூய்மையடைந்து கண் பார்வையும் சீராகும். காதுகள் நன்கு
செவிமடுக்கும் ஆற்றலைப் பெறும். கை கால்கள் வலிமை பெறும். நரம்பு மண்டலம்
சமநிலை அடையும். தோல் மென்மையாகி பிரகாசம் பெறும். உடலில் புத்துணர்ச்சி, மனதில் வலிமை பகுத்தறிவுத் திறன் என்பன அதிகரிக்கும். பொதுவாக இத்தகைய மாற்றங்களை 20ஆம் நாளின் பின்னர் அவதானிக்கலாம்.
இவை தவிர முடக்குவாதம், மூட்டுவலி, நீண்ட நாள் ரணங்கள், குடல் எரிவு, குடல் அழற்சி, ஆஸ்த்மா, இடுப்பு வலி, மன அழுத்தம், இரத்த அழுத்தம், நரம்பு மண்டலக் கோளாறுகள், காய்ச்சல், தூக்கமின்மை, மூளைன் கோளாறுகள், ஒவ்வாமை போன்ற பலவிதமான நோய்களுக்கு நிவாரணமாக நோன்பு விளங்குகிறது.
இவ்வகையான நன்மைகள் அனைத்தையும் பெற வேண்டுமாயின், நாம் ஒரு நிபந்தனையைப் பின்பற்றியாக வேண்டும். “ஆதமுடைய
மகன் ஒரு கிண்ணம் நிறைந்த உணவைக் கொண்டுதன் வயிற்றை நிரப்ப மாட்டான்.
சிறிதளவு உணவானது அவனது தேக ஆரோக்கியத்துக்கு போதுமானதாகும். தனது
வயிற்றின் மூன்றில் ஒரு பகுதியை உணவுக்கென்றும் மூன்றில் ஒரு பகுதியை
நீருக்கென்றும் மிகுதியை காற்றுக்கென்றும் அவன் ஒதுக்கிக் கொள்வான்” என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம்) அவர்களது பொன்மொழியே அந்த நிபந்தனையாகும்.
எமது
ஆன்மிக விருத்தியை நோக்கமாகக் கொண்டு கடமையாக்கப்பட்ட நோன்பு எமது
உடலையும் ஆன்மாவையும் பக்குவப்படுத்துவதாய் அமைந்துள்ளது. இந்த ரமழானில்
எமது புலன்களைக் கட்டுப்படுத்தி பொறுமை, சமூக உணர்வு, நல்லொழுக்கம்
என்பவற்றை எமது வாழ்வில் பழக்கப்படுத்திக் கொண்டு நோன்பின் நலன்கள்
அனைத்தையும் பூரணமாகப் பெற்றுக் கொள்ள முயற்சிப்போமாக!
Alhasanath July 2012
